செனகலிடம் வீழ்ந்தது போலந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள போலந்து அணி, 27–வது இடம் வகிக்கும் செனகல் அணியை எதிர்கொண்டது.

Update: 2018-06-19 21:30 GMT

மாஸ்கோ, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள போலந்து அணி, 27–வது இடம் வகிக்கும் செனகல் அணியை எதிர்கொண்டது.

பந்து அதிக நேரம் போலந்து (59 சதவீதம்) பக்கமே சுற்றிக்கொண்டு இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று என்னவோ செனகல் பக்கம் தான் வீசியது. 37–வது நிமிடத்தில் செனகல் வீரர் இட்ரிசா குயே இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை தடுப்பதற்கு போலந்து கோல் கீப்பர் சிஸ்சினி தயாராக நின்றார். அதற்குள் குறுக்கிட்ட போலந்து வீரர் தியாகோ சியானெக் பந்தை வெளியே தள்ள முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது வலது காலில் பந்து பட்டு வலைக்குள் திரும்பி சுயகோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் செனகல் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் 60–வது நிமிடத்தில் போலந்து வீரர்களின் அசட்டுத்தனமான தவறு, செனகலின் கை ஓங்குவதற்கு வித்திட்டது. அதாவது போலந்து வீரர் கிரிசோவியாக் தங்கள் அணி வீரரை நோக்கி தூக்கியடித்த பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் செனகல் வீரர் நியாங் தட்டிப்பறித்தார். அப்போது தேவையில்லாமல் போலந்து கோல் கீப்பர் சிஸ்சினி நீண்ட தூரத்திற்கு வெளியே வந்து தடுக்க முயல, அவரை சாதுர்யமாக ஏமாற்றிய நியாங் தனிவீரராக முன்னேறி கீப்பர் இன்றி வெறிச்சோடி இருந்த வலைக்குள் பந்தை சுலபமாக அடித்து கோலாக்கினார். இதன் பிறகு 86–வது நிமிடத்தில் போலந்து வீரர் கிரிசோவியாக் ஒரு கோல் திருப்பினார். முடிவில் செனகல் அணி 2–1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி செனகல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்