2-வது சுற்றில் கொலம்பியா, ஜப்பான் செனகல் அணி வெளியேற்றம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடைசி லீக்கில் போலந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்ற ஜப்பான் அதிர்ஷ்டத்தின் பலனால் 2-வது சுற்றை எட்டியது. செனகலை வீழ்த்தி கொலம்பியாவும் அடுத்த சுற்றை உறுதிசெய்தது.

Update: 2018-06-28 23:14 GMT
சமரா,

உலக கோப்பை கால்பந்து தொடரில் ‘எச்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் சமரா நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் செனகல் - கொலம்பியா அணிகள் சந்தித்தன. ‘டிரா’ கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் செனகலும், கட்டாயம் வென்றால் மட்டுமே அது சாத்தியம் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கொலம்பியாவும் ஸ்டேடியத்தில் ஆக்ரோஷமாக விளையாடின.

17-வது நிமிடத்தில் செனகல் வீரர் சாடியோ மேனை, கொலம்பியா வீரர் டேவின்சன் சாஞ்சஸ் பிடித்து இழுத்ததால் செனகல் அணி பெனால்டி கேட்டு முறையிட்டது. இதையடுத்து போட்டி நடுவர், வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, அது பெனால்டி கொடுக்கும் அளவுக்கு ‘பவுல்’ இல்லை என்று கூறி விட்டார். 30-வது நிமிடத்தில் கொலம்பியாவுக்கு பின்னடைவாக காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வெளியேற நேரிட்டது. முதல் பாதியில் இரு அணி தரப்பிலும் கோல் ஏதும் போடவில்லை.

பிற்பாதியில் 74-வது நிமிடத்தில் கொலம்பியா கோல் போட்டது. கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கொலம்பியா வீரர் எர்ரி மினா தலையால் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து செனகல் கோல் கீப்பர் காதிம் டியாயே கையில் பட்டு உள்ளே புகுந்து கோலாக மாறியது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆப்பிரிக்க அணியான செனகலை வீழ்த்தியது.

இதே பிரிவில் வால்கோகிராட் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்துடன் கோதாவில் குதித்தது. இந்த ஆட்டத்திலும் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. போலந்து வீரர் கமில் குரோசிக்கி தலையால் முட்டி அடித்த பந்தை ஜப்பான் கோல் கீப்பர் கவாஷிமா அற்புதமாக பாய்ந்து தடுத்து நிறுத்தினார்.

பிற்பாதியில் ஆட்டம் மேலும் வேகமெடுத்தது. 59-நிமிடத்தில் போலந்து வீரர் ஜான் பெட்னாரெக் கோல் போட்டு தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். பதிலடி கொடுக்க ஜப்பான் கடைசி நிமிடம் வரை போராடியும் பலன் இல்லை. முடிவில் போலந்து அணி 1-0 என்ற கோல கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது.

லீக் சுற்று முடிவில் ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் அணிகள் 2-வது சுற்றை எட்டின. செனகல் (4 புள்ளி), போலந்து (3 புள்ளி) அணிகள் வெளியேறின.

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த செனகல், நைஜீரியா, துனிசியா, மொராக்கோ, எகிப்து ஆகிய 5 அணிகளும் இந்த முறை லீக் சுற்றை தாண்டவில்லை. 1986-ம் ஆண்டுக்கு பிறகு ‘ரவுண்ட் 16’ எனப்படும் நாக்-அவுட் சுற்றை எந்த ஆப்பிரிக்க அணியும் எட்டாதது இதுவே முதல் நிகழ்வாகும்.
 
ஒரே புள்ளி, ஒரே கோல் எண்ணிக்கை: புதிய விதிமுறையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்ற ஜப்பான் ‘எச்’ பிரிவில் லீக் முடிவில் கொலம்பியா 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பான், செனகல் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. பொதுவாக இது போன்ற சூழலில் கோல் விகிதாசாரம் பார்க்கப்படும். ஆனால் இவ்விரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்தும், 4 கோல்கள் விட்டுக்கொடுத்தும் அதிலும் சமநிலை வகித்தன. இதனால் இந்த பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வாகும் 2-வது அணி எது? என்பதற்கு விடைகிடைக்காமல் ரசிகர்கள் சிறிது நேரம் குழம்பிப்போனார்கள்.

இதைத் தொடர்ந்து ‘பேர் பிளே’ என்னும் புதுமையான விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அதாவது நடப்பு தொடரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றி விளையாட்டுக்குரிய உத்வேகத்துடனும், ஒழுக்கத்துடனும் ஆடிய அணி எது என்று இரு அணிகளுக்கு இடையே ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் ஜப்பானின் கை சற்று ஓங்கி இருந்தது. 3 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து ஜப்பான் மொத்தம் 4 மஞ்சள் அட்டை மட்டுமே பெற்று இருந்தது. இந்த எண்ணிக்கை செனகலுக்கு 6ஆக இருந்தது. அதன் அடிப்படையில் ஜப்பான் அணிக்கு 2-வது சுற்று அதிர்ஷ்டம் அடித்தது. உலக கோப்பை வரலாற்றில் இந்த முறையில் ஓர் அணி முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்