கால்பந்து
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் விபத்தில் பலி

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார்.
தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குலோத்துங்கன் (வயது 40). கால்பந்து வீரரான இவர் தமிழக கால்பந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் தமிழக அணி சந்தோஷ் கோப்பை போட்டியில் பங்கேற்று இருக்கிறது.

குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை திருச்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அதிகாலை 2 மணி அளவில் தஞ்சை- வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிள் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருந்த இரும்புகம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குலோத்துங்கன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து உருவான மிகச் சிறந்த கால்பந்து வீரரான குலோத்துங்கன், மேற்கு வங்காளத்தில் பிரபலமான மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், முகம்மதன் ஸ்போர்ட்டிங் ஆகிய கிளப்புகளுக்காக விளையாடி இருக்கிறார். 2003-ம் ஆண்டு ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈஸ்ட்பெங்கால் வென்ற போது அந்த அணியில் குலோத்துங்கனும் இடம் பிடித்திருந்தார்.

இதே போல் மும்பை சிட்டி எப்.சி., விவா கேரளா, பவானிபோர் எப்.சி. ஆகிய கிளப்புகளுக்காகவும் ஆடியிருக்கிறார். சிறந்த நடுகள வீரரான குலோத்துங்கன் கோல் அடிப்பதிலும், கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதிலும் கைதேர்ந்தவர்.

அவரது மறைவுக்கு கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குலோத்துங்கனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் இணைந்து விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.