சர்வதேச நட்புறவு கால்பந்து: இந்தியா - ஓமன் அணிகள் இன்று மோதல்

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்தியா - ஓமன் அணிகள் இன்று மோதுகின்றன.

Update: 2021-03-24 21:11 GMT
துபாய், 

இந்திய கால்பந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் தலா ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஓமன் அணிகள் இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி துபாயில் இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். சமீபத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு 81-வது இடத்தில் உள்ள ஓமன் கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்கான தகுதி வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. அதற்கு தயாராக இந்த போட்டியை சரியாக பயன்படுத்தி கொள்ள எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் வலுவான ஓமனுக்கு எதிராக இந்திய அணி இதுவரை சாதித்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி, ஓமனுடன் 6 முறை மோதி இருக்கிறது. இதில் ஓமன் அணி 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில் ‘வலுவான அணியுடன் மோதும் போது வீரர்களுக்கு அதிக நம்பிக்கை கிடைப்பதுடன், வருங்காலத்தில் அச்சமின்றி செயல்படவும் உதவிகரமாக இருக்கும். எனவே இந்த ஆட்டத்தில் நெருக்கடி இன்றி விளையாடுமாறு வீரர்களை அறிவுறுத்தி இருக்கிறோம். நாளைய (இன்றைய) ஆட்டம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்