கால்பந்து முன்னாள் கேப்டன் சமர் பானர்ஜி மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமர் பானர்ஜி, கொரோனா தொற்று காரணத்தால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-08-20 21:29 GMT

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான சமர் பானர்ஜி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகி இருந்த 92 வயதான சமர் பானர்ஜியின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். முன்கள வீரரான சமர் பானர்ஜி 1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் பல்கேரியாவிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணியின் சிறந்த செயல்பாடு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற மோகன் பகான் கிளப் அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடிய சமர் பானர்ஜி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 'பத்ருதா' என்று செல்லமாக அழைக்கப்பட்ட சமர் பானர்ஜியின் மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளன பொறுப்பு பொதுச்செயலாளர் சுனந்தோ தார் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் கொல்கத்தா, இம்பாலில் நேற்று நடந்த ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்