தேசிய ஓபன் தடகளம்: ரெயில்வே அணி ‘சாம்பியன்’ கடைசி நாளில் லட்சுமணன், சூர்யா தங்கம் வென்றனர்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்த 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்,;

Update:2017-09-29 04:30 IST
சென்னை,

கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் வீரர் லட்சுமணன் (29 நிமிடம் 16.21 வினாடி) தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி அசத்தினார். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை எல்.சூர்யா தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்று இருந்த லட்சுமணன், சூர்யா இருவரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தேசிய சாதனையாளரான ரஞ்சித் மகேஸ்வரி (ரெயில்வே) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். போல்வால்ட் பந்தயத்தில் முன்னணி வீராங்கனை வி.எஸ்.சுரேகா (ரெயில்வே) 6-வது இடத்துக்கு சறுக்கினார்.

4 நாள் பந்தயங்கள் முடிவில், 16 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்திருந்த ரெயில்வே அணி 296 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. சர்வீசஸ் அணி 182 புள்ளிகளுடன் 2-வது இடம் பெற்றது. பரிசுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன், பொருளாளர் சி.லதா, அர்ஜூன் ஆதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்