தரவரிசையில் முதல் 20 இடத்துக்குள் வருவதே இலக்கு - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்

தரவரிசையில் முதல் 20 இடத்துக்குள் வருவதே இலக்கு என தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தெரிவித்தார்.

Update: 2018-04-20 23:00 GMT
சென்னை,

‘உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்த ஆண்டுக்குள் முதல் 20 இடத்துக்குள் வருவதே இலக்கு’ என்று காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்று அசத்திய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சத்யன் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் (சரத்கமலுடன் இணைந்து), கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் (மனிகா பத்ராவுடன் சேர்ந்து) வென்றார்.

சென்னையை சேர்ந்த 25 வயதான சத்யன் ஓ.என்.ஜி.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான சத்யன் தனது அறிமுக காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலேயே 3 பதக்கங்கள் வென்று எல்லோருடைய கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து இருக்கிறார். சத்யன் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

பதக்கம் வென்ற சத்யனுக்கு செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் சத்யனுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் கேடயத்தை அந்த கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பி.பாபுமனோகரன் வழங்கி பாராட்டினார். விழாவில் முன்னாள் சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர் எஸ்.ராமன், முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க புரவலர் டி.வி.சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சத்யன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய முதலாவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலேயே 3 பதக்கம் வென்றதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இந்த போட்டி எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தது. நிறைய நெருக்கடியும், எதிர்பார்ப்பும் நிலவியது. நெருக்கடியை திறம்பட சமாளித்து சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சுவீடனில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறேன். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட முன்னணி நாடுகள் கலந்து கொள்வதால் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். நாங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முயற்சிப்போம். அப்படி நடந்தால் அது சாதனையாக அமையும். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதையே எங்களுடைய இலக்காக வைத்து இருக்கிறோம்.

தற்போது உலக ஒற்றையர் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் நான் இந்த ஆண்டுக்குள் முதல் 20 இடங்களுக்கும் வர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதும் எனது லட்சியமாகும் இவ்வாறு சத்யன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்