டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார்.

Update: 2018-05-06 03:57 GMT
டோஹா,

டோஹாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் இந்திய இளம் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து 4-வது இடத்தை பெற்றார்.

நீரஜ் சோப்ரா, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 87.43 தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்தார்.

ஏற்கனவே நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 2016-ல் புதிய சாதனையோடு ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் டைமண்ட் லீக் போட்டியில் உலக சாம்பியன் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ஆண்ரிஸ் ஹாப்மேன் ஆகிய ஜாம்பவான்களுடன் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். அவர்கள் அனைவரும் 90 மீ தூரம் ஈட்டி எறிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆவர்.

இந்த போட்டியில் ரோலர் தங்கத்தையும், வெட்டர் வெள்ளியையும், ஹாப்மேன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

மேலும் செய்திகள்