தேசிய நடைப்பந்தயம் இர்பான், சவுமியா முதலிடம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6–வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

Update: 2019-02-16 21:30 GMT

சென்னை, 

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6–வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. முதலில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோமீட்டர் தூர நடைப்பந்தயம் நடந்தது. போட்டியை திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெய்கிரண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இந்தியா, மலேசியா, சீனதைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து தொடங்கி ஜிம்கானா கிளப் வழியாக தீவுத்திடல் வரை 16 ரவுண்ட் சுற்றி வந்தனர். ஆண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த இர்பான் ஒரு மணி 26 நிமிடம் 19 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கமும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் கைப்பற்றினார். அரியானாவைச் சேர்ந்த தேவந்திரசிங் (1 மணி 26 நிமிடம் 20 வினாடி) 2–வதாக வந்தார். எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான தமிழகத்தை சேர்ந்த கணபதி கிருஷ்ணன் 5–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்கள் பிரிவில் கேரள வீராங்கனை சவுமியா 1 மணி 40 நிமிடம் 25 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்தார். 2–வது இடத்தை பிரியங்காவும் (உத்தரபிரதேசம்), 3–வது இடத்தை ரவீனாவும் (அரியானா) பெற்றனர். 2–வது மற்றும் கடைசி நாளான இன்று காலை ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் நடை பந்தயமும், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோமீட்டர் நடைபந்தயமும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்