உலக பளுதூக்குதலில் பதக்கத்தை நழுவ விட்டார் மீராபாய் சானு

உலக பளுதூக்குதலில் மீராபாய் சானு பதக்கத்தை நழுவ விட்டார்.

Update: 2019-09-19 22:12 GMT
பட்டையா, 

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் பட்டையா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு மொத்தம் 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோ மற்றும் கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோ) தூக்கி 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். சீன வீராங்கனை ஜியாங் ஹூஹூவா மொத்தம் 212 கிலோ தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஹோவ் ஸிஹூய் (சீனா) வெள்ளிப்பதக்கமும் (211 கிலோ), ரி சாங் கும் (வடகொரியா) வெண்கலப் பதக்கமும் (204 கிலோ) பெற்றனர்.

மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான மீராபாய் சானு தனது 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சித்து அது முடியாமல் போனது. அதை வெற்றிகரமாக தூக்கியிருந்தால் வெண்கலப்பதக்கம் கிடைத்திருக்கும். மயிரிழையில் பதக்கம் நழுவி போனாலும் இன்னொரு வகையில் இது அவருக்கு திருப்தி அளித்து இருக்கும். இதற்கு முன்பு அவர் அதிகபட்சமாக 199 கிலோ எடை தான் தூக்கி இருந்தார். தனது முந்தைய தேசிய சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்