ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் விகாஸ், சிம்ரன்ஜித்

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், சிம்ரன்ஜித் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அமித் பன்ஹால், மேரிகோம் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

Update: 2020-03-11 00:06 GMT
அம்மான்,

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், உலக போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான கஜகஸ்தான் வீரர் அப்லைகான் சூசுபோவை சந்தித்தார். இதில் இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்ததையும் பொருட்படுத்தாமல் போராடிய விகாஸ் கிருஷ்ணன் 3-2 என்ற கணக்கில் அப்லைகானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் வெல்வது உறுதியாகிவிட்டது.

52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில், உலகின் நம்பர் ஒன் வீரரும், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் சீன வீரர் ஜியான்குன் ஹூவிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான ஜியான்குன் ஹூ கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அமித் பன்ஹாலிடம் கண்ட தோல்விக்கு இப்போது பதிலடி கொடுத்து விட்டார்.

பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 2-3 என்ற கணக்கில் சாங் யுவானிடம் (சீனா) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். இதனால் மேரிகோம் வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று.

69 கிலோ பிரிவில் உலக போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற பெருமைக்குரிய இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 0-5 என்ற கணக்கில் ஹாங் குவிடம் (சீனா) தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

அதே சமயம் 60 கிலோ எடைப்பிரிவில் களம் புகுந்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் அசத்தினார். தன்னை எதிர்த்து நின்ற சீனதைபேயின் ஷி யி வுவை 4-1 என்ற கணக்கில் சாய்த்து இறுதி சுற்றை எட்டினார்.

விகாஸ் கிருஷ்ணன், அமித் பன்ஹால், மேரிகோம், சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா ஆகியோர்அரைஇறுதிக்குள் நுழைந்தன் மூலம் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்