அகில இந்திய கூடைப்பந்து: தமிழக மின்வாரிய அணிக்கு 2-வது இடம்

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், தமிழக மின்வாரிய அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

Update: 2020-03-11 23:11 GMT
சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44-வது அகில இந்திய மின்வாரிய அணிகள் இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கேரளா-தமிழ்நாடு அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேரளா அணி 74-46 என்ற புள்ளி கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேரள அணியில் ஸ்ரீராக் நாயர் 16 புள்ளியும், சரத் 15 புள்ளியும் குவித்தனர். தமிழக அணியில் சிவக்குமார் 20 புள்ளியும், ரமேஷ் 11 புள்ளியும் சேர்த்தனர். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 71-42 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்கள்.

விழாவில் முன்னாள் எம்.பி.பாலகங்கா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை நிர்வாக இயக்குனர் எஸ்.வினீத், போலீஸ் டி.ஜி.பி.தமிழ்செல்வன், விளையாட்டு அதிகாரி சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்