‘நான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை’- சல்வா

தான் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என சல்வா தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-07 23:47 GMT
மான்ட் கார்லோ, 

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான சல்வா ஈத் நாசர் (பக்ரைன்) ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தவறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து 22 வயதான சல்வா கூறுகையில், ‘கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக மூன்று முறை ஊக்கமருந்து சோதனையை தவற விட்டேன். இது இயல்பான ஒன்று. யாருக்கும் இது போல் நடக்கத்தான் செய்யும். மக்களை நான் குழப்பமடையச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நான் ஒரு போதும் விளையாட்டில் மோசடி செய்தது கிடையாது. விரைவில் இந்த பிரச்சினை சரியாகும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதற்கிடையே தடகளத்தின் நேர்மை யூனிட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த ஆண்டு தோகாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சல்வா ஊக்கமருந்து சோதனைக்காக தான் எங்கே இருக்கிறேன் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க மூன்று முறை தவறினார். ஆனால் அப்போது அவர் இடைநீக்கம் செய்யப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் அவர் இதே தவறை மீண்டும் செய்தார். 4-வது முறையாக ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அடுத்ததாக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை மேற்கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சல்வாவுக்கு 2 ஆண்டு வரை தடை விதிக்கப்படும். அத்துடன் உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கமும் பறிக்கப்படலாம்.

மேலும் செய்திகள்