தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை... நீரஜ் சோப்ரா செயலுக்கு குவியும் பாராட்டுகள்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

Update: 2023-08-28 10:24 GMT

புடாபெஸ்ட்,

அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

அவர் போட்டியின் முடிவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தனக்கான மற்றும் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். முதல் சுற்றில் சோப்ரா தவறிழைத்தபோதும், 2-வது சுற்றில் அதிரடியாக செயல்பட்டு, 88.17 மீட்டர் தொலைவுக்கு சிறப்பான முறையில் ஈட்டி எறிந்து, இறுதி வரை முன்னிலையில் நீடித்து பதக்கத்தை தட்டிப்பறித்தார்.

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றதற்காக மட்டுமின்றி, அவருடைய தேசப்பற்றுக்காகவும் கூட.

போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றதும், அங்கேரி நாட்டு ரசிகை ஒருவர் சோப்ராவை அணுகி இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால், அது என்னுடைய தேசிய கொடிக்கான விதியை மீறும் செயலாகும் என கூறி நீரஜ் சோப்ரா அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

எனினும், அதற்கு பதிலாக அந்த ரசிகையின் டி-சர்ட்டின் வலது கை மேல் பகுதியில் கையெழுத்து போட்டார். இதனால், களத்திலும் வெளியிலும் கூட அவர் தொடர்ந்து மக்களின் மனங்களை வெல்பவராக காட்சி அளிக்கிறார் என்று நெட்டிசன்கள் பலர் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில், காமன்வெல்த் போட்டியின் சாம்பியனான அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளி பதக்கமும், செக் குடியரசின் ஜேக்கப் வதிலெஜ் (86.67 மீட்டர்) வெண்கல பதக்கமும் வென்றனர்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ராவின் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். அவர் ஒலிம்பிக், டையமண்ட் டிராபி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்