யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்; வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்று இந்திய வீராங்கனை வரலாறு படைத்துள்ளார்.

Update: 2023-08-19 12:01 GMT

அம்மன்,

ஜோர்டான் நாட்டில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அந்திம் பங்கால் கலந்து கொண்டார். போட்டி தொடங்கியதில் இருந்து, உக்ரைன் நாட்டின் மரியா எப்ரிமோவாவை அதிரடியாக அவர் எதிர்கொண்டார்.

முடிவில், 4-0 என்ற புள்ளி கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியனான பங்கால், தொடர்ந்து 2-வது முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பங்கால், இந்த பதக்கத்தினை எனது பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனெனில் எனக்காக அவர்கள் உண்மையில் கடுமையாக பணியாற்றினார்கள். அவர்களாலேயே என்னால் தங்கம் வெல்ல முடிந்தது.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை தொடர்ந்து தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக உள்ளேன். வருங்காலத்திலும் இதுபோன்று நிறைய பதக்கங்களை வெல்வேன் என நம்புகிறேன் என பங்கால் கூறியுள்ளார்.

அவரது வெற்றியை பெற்றோர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 2024 ஒலிம்பிக்கிலும் பங்கால் தங்கம் வெல்வார் என அவருடைய தந்தை ராம் நிவாஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்