உலக ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை

உலக ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் தங்கப்பதக்கம் வென்று சாதனையை படைத்தார்.

Update: 2022-08-27 19:21 GMT

 உலக கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி போஸ்னியா நாட்டில் உள்ள சராஜீவோ நகரில் நடந்தது. இதன் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிஆட்டத்தில் 16 வயது இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பாம் 1-0 என்ற கணக்கில் பிரேசிலின் பியான்கா ரீஸ்சை மடக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் லின்தோய் உலக ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். மணிப்பூரை சேர்ந்த லின்தோய் கடந்த ஜூலை மாதம் நடந்த ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

தற்காப்பு கலையான ஜூடோவில் தொடர்ந்து அசத்தும் லின்தோய் சனம்பாம் காணொளி மூலம் அளித்த பேட்டியில், 'சிறுவயதிலேயே ஜூடோ விளையாட்டில் ஈடுபட்டேன். என்னை நான் ஒரு ஆணாகவே பாவிக்கிறேன். பெண்களை விட ஆண் நண்பர்களே எனக்கு அதிகம். அவர்களுடன் அடிக்கடி ஜூடோவில் மோதுவேன். அந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்படும். அவர்களை எனது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தது உண்டு. உலக போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பானதாகும். இது நம்ப முடியாத உணர்வாகும். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். ஆனால் அதனை செய்ய முடியவில்லை என்றால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்