'வீரர்கள் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது' - இந்திய மல்யுத்த சம்மேளனம் பதில்

சம்மேளன தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-01-21 21:24 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 18-ந் தேதி திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் புகார் குறித்து 72 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய கடிதத்துக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகம் அதன் விதிமுறையின் படி முறையாக தேர்வு செய்யப்பட்டதாகும். அதில் தன்னிச்சையாக தவறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. தற்போதைய தலைவர் (பிரிஜ் பூஷன் ஷரண்சிங்) தலைமையிலான மல்யுத்த சம்மேளனம் வீரர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்திய மல்யுத்தத்தின் மதிப்பை சர்வதேச அளவில் இந்த நிர்வாகம் உயர்த்தி இருக்கிறது. நேர்மையான மற்றும் கண்டிப்பான நிர்வாகம் இன்றி இதனை சாதித்து இருக்க முடியாது. பாலியல் கொடுமை குறித்து விசாரிக்க மல்யுத்த சம்மேளனத்தில் தனி கமிட்டி இருக்கிறது. அதில் சாக்ஷி மாலிக் உறுப்பினராக இருக்கிறார். அந்த கமிட்டிக்கு இதுவரை எந்த புகாரையும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை.

வீரர்கள் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது. சம்மேளன தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களது தனிப்பட்ட நலன் கருதி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை (அரியானா) சேர்ந்தவர்கள் ஆவர்"

இவ்வாறு இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளித்துள்ளது. இதனிடையே இந்த புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் ஷரண்சிங் விலகி இருக்கும் படி மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்