சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகள்; இந்திய குழு 202 பதக்கங்களை அள்ளியது

ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகளில் இந்திய குழு மொத்தம் 202 பதக்கங்களை அள்ளியுள்ளது.

Update: 2023-06-26 09:14 GMT

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றுமை, பன்முக தன்மை மற்றும் சிறப்பு திறன்கள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடந்தன.

இதில் நிறைவு நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) இந்திய குழுவினர் மொத்தம் 202 பதக்கங்களை அள்ளி வந்து உள்ளனர். இந்திய குழு 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என பதக்கங்களை வென்றது. இவற்றில் தடகள போட்டிகளில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றனர்.

போட்டி நிறைவு நாளில் பிராண்டன்பர்க் கேட் பகுதியில், ஒற்றுமையின் சிறந்த பண்புகளை பிரதிபலிக்க செய்வதற்காகவும் மற்றும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் முக்கியத்துவங்களை முன்னே கொண்டு வருவதற்காகவும் ஒவ்வொரு குழுவை சேர்ந்த உறுப்பினர்களும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த உலக போட்டிகளை நேரிடையாக 3.3 லட்சம் பேர் கண்டு களித்து உள்ளனர். இதுதவிர, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் வழியே பலர் போட்டிகளை பார்த்து உள்ளனர்.

சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான தலைவர் டாக்டர் மல்லிகா நட்டா கூறும்போது, போட்டியில் வெற்றி பெற்றவர்களை புகழ்ந்து பேசினார்.

அவர்களின் செயல்பாடுகளை சுட்டிகாட்டியதுடன், நடைமுறை வாழ்க்கையில் மற்றவர்களை போன்று மக்கள் இந்த தடகள வீரர்களையும் ஏற்று கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்