உலக இளையோர் பளுதூக்குதல்: இந்திய வீரர் குருநாயுடு சனாபதி தங்கம் வென்று சாதனை..!
உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள லியோன் நகரில் நடந்து வருகிறது.;
image courtesy: SAI Media twitter
புதுடெல்லி,
உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள லியோன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 55 கிலோ உடல் எடைப்பிரிவில் 16 வயது இந்திய வீரர் குருநாயுடு சனாபதி 'ஸ்னாட்ச்' முறையில் 104 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 126 கிலோவும் என மொத்தம் 230 கிலோ எடைதூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியில் சவுதி அரேபியா வீரர் அலி மஜீத் மொத்தம் 229 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தானின் யேராஸ்சி உம்ரோவ் மொத்தம் 224 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் மராட்டிய வீராங்கனை சவுமியா தல்வி 'ஸ்னாட்ச்' முறையில் 65 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 83 கிலோவும் என மொத்தம் 148 கிலோ எடைதூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ரோஸ் ரமோஸ் (155 கிலோ) தங்கப்பதக்கமும், வெனிசுலா வீராங்கனை கெர்லி மொன்டிலா (153 கிலோ) வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை பவானி (132 கிலோ) 8-வது இடம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்று இருக்கிறது.