ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் முகமது யூசுப்பை சந்திக்கிறார்.;
கட்டாக்,
ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 21-19, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் ரோனாக் சவுஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் முகமது யூசுப்பை சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீராங்கனை உன்னதி ஹூடா சரிவில் இருந்து மீண்டு 18-21, 21-16 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான தஸ்னிம் மிர்ரை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்திய வீராங்கனை இஷாராணி பருவா சறுக்கலை சமாளித்து 18-21, 21-7, 21-7 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான தன்வி ஹேமந்தை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இஷா ராணி, உன்னதி ஹூடாவை எதிர்கொள்கிறார்.