663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு!

கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் விலை குறைக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் மக்களுக்கு இருந்தது.

Update: 2024-04-11 00:54 GMT

மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று மோட்டார் வாகனமாகும். சாதாரண ஏழை - எளியவர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு இருசக்கர வாகனம் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. இதுபோல, கார் ஒரு காலத்தில் ஆடம்பர வாகனமாக கருதப்பட்ட நிலையில், அதுவும் இப்போது ஒரு நடுத்தர குடும்பத்துக்கு தேவையான ஒன்றாகிவிட்டது. மக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் சரக்கு வாகனங்களும், பஸ்கள், ஆட்டோ ரிக்ஷா, டாக்சி போன்ற வாகனங்கள் பயணிகள் போக்குவரத்திலும் பெரும்பங்கு ஆற்றிவருகின்றன. இந்த வாகனங்களுக்கெல்லாம் தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல்-டீசல் விலை ஒவ்வொருவரின் பட்ஜெட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க முடியாது என்பதால், இதன் விலை உயர்வு ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் வரவு-செலவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தும் டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகிறது. பெட்ரோல்-டீசலுக்கான கச்சா எண்ணெய் இந்தியாவில் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக, சர்வதேச கச்சா எண்ணெய் விலையை வைத்துத்தான், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல்-டீசலில் 90 சதவீதம் அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுமே விற்பனை செய்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்து இந்த எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை உயர்வோ, குறைப்போ செய்யப்பட்டது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீண்டகாலம், அதாவது 663 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் விலை குறைக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் மக்களுக்கு இருந்தது. 2022-ல் கச்சா எண்ணெய் விலை மிகவும் அபரிமிதமாக உயர்ந்தபோது, எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப விலையைக் கூட்ட வேண்டிய அவசியம் வந்தது. அந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் இருமுறை கலால் வரியை குறைத்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13-ம், டீசல் விலை ரூ.16-ம் குறைக்கப்பட்டதால், அதன் பலன் மக்களுக்கு கிடைத்தது. கடந்த மாதத்தின் முதல் 2 வாரங்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சராசரியாக ரூ.83.04 டாலராக இருந்த போதிலும், 15-ந்தேதி அதிகாலை முதல் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள் டிராக்டர்கள், பம்பு செட்டுகளுக்கு வாங்கும் டீசலுக்கான செலவும் குறையும். சரக்கு வாகனங்களுக்கு ஆகும் டீசல் விலை குறைப்பால், விலைவாசி சற்று குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி லாபம் கிடைத்து இருப்பதால், இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாமே, மத்திய அரசாங்கமும் தன் பங்குக்கு கலால் வரியை குறைத்து இருக்கலாமே, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் உயர்ந்து விடக்கூடாது என்ற எண்ணமும் மக்களுக்கு இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்