எல்லோருடைய கணைகளும் வி.கே.பாண்டியனை நோக்கி..!

வி.கே.பாண்டியன் முதலில் தன் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்பு பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தும் நேரடி அரசியலில் இறங்கினார்.

Update: 2024-05-13 00:54 GMT

சென்னை,

நாடு முழுவதும் இப்போது 7 கட்டமாக 18-வது மக்களவை தேர்தல் நடக்கிறது. இதில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7-ந் தேதி என்று 3 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. இன்று 4-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா மாநிலமும் உண்டு. ஒடிசாவில் உள்ள 21 மக்களவை தொகுதிகளுக்கும் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் இன்று 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 28 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வருகிற 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதிகளிலும் அங்கு தேர்தல் நடக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 5 முறை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் பிஜு ஜனதா தளம் கட்சியே வெற்றி பெற்று, அதன் தலைவர் 77 வயதான நவீன் பட்நாயக்கே முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். இந்த தேர்தலில் இப்போது பிஜூ ஜனதா தளம், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக வி.கே.பாண்டியன் என்ற விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வலம் வந்து கொண்டிருக்கிறார். யார் இந்த வி.கே.பாண்டியன்?. மதுரையை அடுத்த மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டியை சேர்ந்த வைரவன் என்ற வக்கீலின் மகன். 2000-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேறிய வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதாவும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். இருவரும் அப்பழுக்கற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக ஒடிசா மாநிலத்தில் பணியாற்றினர். அங்கு பல முக்கிய திட்டங்கள் தீட்டப்பட்டதிலும், நிறைவேறியதிலும் வி.கே.பாண்டியன்தான் பின்னணியில் இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், முதல்-மந்திரியின் பெரும் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்ததால் முதல்-மந்திரியின் செயலாளராகவும் பணியாற்றினார். மக்களிடமும் வி.கே.பாண்டியன் பெரும் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் செல்லப்பிள்ளையாகவும் அரசியல் வாரிசாகவுமே எல்லோரும் மதிப்பிட்டனர். அரசியலுக்கு வராமலேயே அரசை நடத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்த நேரத்தில், வி.கே.பாண்டியன் முதலில் தன் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டும், பின்பு பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தும் நேரடி அரசியலில் இறங்கினார். இந்த தேர்தலில், அவர் போட்டியிடாவிட்டாலும் வேட்பாளர் தேர்வு, பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரித்தல் என்று எல்லாவற்றிலும் அவருடைய பங்கு முதன்மையாக இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக ஒடிசா வந்த பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என எல்லோருமே தங்கள் அரசியல் கணைகளை நவீன் பட்நாயக்கைவிட வி.கே.பாண்டியன் மீதே அதிகமாக வீசினர். "ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆட்சி நடக்கவில்லை. அந்த மாநிலத்தை சேராத வி.கே.பாண்டியன் ஆட்சிதான் நடக்கிறது" என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தாக்கினர். ஆனால், நவீன் பட்நாயக் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நவீன் பட்நாயக் இப்போது இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார். அதில் வி.கே.பாண்டியன்தான் போட்டியிடுவார் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வி.கே.பாண்டியனை குறிவைத்தே, அவர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும் பிஜூ ஜனதா தள தொண்டர்கள் அவரை தங்களில் ஒருவர், நவீன் பட்நாயக்கின் வாரிசாகவே கருதுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தெளிவான விடை ஜூன் 4-ந்தேதி கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்