நடுத்தர மக்களுக்கு வசதி; ஏழை மக்களுக்கு அவதி

ஏழை மக்கள், நடுத்தர மக்கள், வசதிபடைத்தவர்கள் எல்லோருக்குமே பயணம் என்பது அத்தியாவசிய தேவைதான்.

Update: 2022-07-17 19:55 GMT

ஏழை மக்கள், நடுத்தர மக்கள், வசதிபடைத்தவர்கள் எல்லோருக்குமே பயணம் என்பது அத்தியாவசிய தேவைதான். இதில் குறைந்த தூரம் பயணம் செய்பவர்கள், தொலைதூரம் பயணம் செய்பவர்கள், அதிலும் குறிப்பாக இரவு பயணம் மேற்கொள்பவர்கள் என அனைவருமே ரெயில் பயணத்தைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். தொலைதூர பயணத்தை மேற்கொள்பவர்கள் கழிப்பறை வசதி இருப்பதாலும், தூங்கும் படுக்கை வசதி இருப்பதாலும் ரெயில் பயணம்தான் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. அதனால்தான் எல்லா ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. கூடுதல் ரெயில்கள் விடவேண்டும் என்ற கோரிக்கைகளும் வருகின்றன.

இந்த நிலையில், எப்போது ரெயில் கட்டணத்தை கூட்டினாலும், மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அதனால்தான் ரெயில்வே நிர்வாகம், சமீபத்தில் ரெயில் கட்டணத்தை கூட்டாமல், பல பாசஞ்சர் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றிவிட்டது. இதனால் மக்கள் பாசஞ்சர் ரெயிலுக்கான குறைந்த கட்டணத்துக்கு பதிலாக, கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும், தொலைதூர ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள், சாதாரண படுக்கை வசதி ரெயில் பெட்டிகள், மூன்று அடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன ரெயில் பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன ரெயில் பெட்டிகள், முதல் வகுப்பு குளிர்சாதன ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வகை ரெயில் பெட்டிக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டி கட்டணம் ரூ.215 ஆகும். இது பஸ் கட்டணத்தைவிட மிகமிக குறைவு என்பதால், ஏழை எளிய மக்கள் இதில் பயணம் செய்யவே அதிகம் முன்வருவார்கள். சாதாரண படுக்கை வசதிகொண்ட ரெயில் கட்டணம் ரூ.395. மேலும் 3 அடுக்கு ஏ.சி. வசதி ரெயில் பெட்டி கட்டணம் ரூ.1,040. இரண்டு அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டி கட்டணம் ரூ.1,460. முதல்வகுப்பு ஏ.சி. பெட்டி கட்டணம் ரூ.2,440 ஆகும்.

இத்தகைய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வழக்கமாக முன்பதிவு இல்லாத 5 ரெயில் பெட்டிகள், 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், 6 ஏ.சி. மூன்று அடுக்கு ரெயில் பெட்டிகள், 2 ஏ.சி. இரண்டு அடுக்கு ரெயில் பெட்டிகள் என 20 ரெயில் பெட்டிகளும், குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டும் ஏ.சி. முதல் வகுப்பு ரெயில் பெட்டியும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது ரெயில்வே நிர்வாகம் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 3 ஆக குறைக்கவும், சாதாரண படுக்கை வசதி ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 7-ல் இருந்து 2 ஆகவும், 3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6-ல் இருந்து 10 ஆக உயர்த்தவும், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை 2-ல் இருந்து 4 ஆக உயர்த்தவும் முடிவு எடுத்துள்ளது.

மேலும், அனைத்து ரெயில்களிலும் ஒரு ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி இணைக்கப்பட வேண்டும் என்றும் கொண்டு வரப்போகிறது. இதனால் அதிக அளவு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் குளிர்சாதன ரெயில் பெட்டி பயணிகளுக்கு, அதாவது நடுத்தர, வசதிபடைத்த பயணிகளுக்கு டிக்கெட்டு கிடைப்பது எளிதாகும். இதுமட்டுமல்லாமல், ரெயில்வேக்கு வருமானம் பெருகும். ஆனால், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய விரும்பும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு சாராருக்கு கூடுதல் வசதிகள் அளிப்பது வரவேற்புக்குரியதுதான் என்றாலும், குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் ஏறத்தாழ 590 பயணிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால், ஏழை மக்கள் பயனடையும் வகையில், அந்த ரெயில் பெட்டிகள் மட்டும் கொண்ட தனி ரெயில்கள் விடுவது குறித்தும் ரெயில்வே நிர்வாகம் பரிசீலிக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்