தேர்தலில் போட்டியிட என்னிடம் பணமில்லை

தமிழ்நாட்டில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ போட்டியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய நிர்மலா சீதாராமன், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

Update: 2024-04-04 01:10 GMT

18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக அதாவது, ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக அதாவது, ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி மந்திரிசபையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ் ஆகியோர் இப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதேபோல், மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், மீண்டும் 2-வது முறையாக அதே மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றார். ஆக அவருக்கு இன்னும் 6 ஆண்டுகள் பதவி காத்து இருக்கிறது என்றாலும், அவர் மக்களவைக்கு நீலகிரி தொகுதியில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவரைப்போல தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் ஆந்திராவில் இருந்து பா.ஜனதா ஆட்சி அமைக்கப்பட்ட ஆண்டு, அதாவது 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மத்திய இணை மந்திரி பொறுப்பிலும் இருந்தார். மீண்டும் 2016-ல் இருந்து கர்நாடக மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், 2016 முதல் 2019 வரை ராணுவ மந்திரியாக இருந்தார். 2019-ம் ஆண்டு முதல் நிதி மந்திரியாக இருந்த காலகட்டத்தில் 2022-ல் மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் 2028 ஜூன் வரை இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மற்ற மத்திய மந்திரிகளைப் போல அவரும் தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் இருந்து மக்களவைக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவே இந்த இரு மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் இருந்து போட்டியிட கேட்டுக்கொண்டதாக நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ போட்டியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய நிர்மலா சீதாராமன், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனக்கு மேலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆந்திராவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி நீ இந்த சாதியை சேர்ந்தவரா? இந்த மதத்தை சேர்ந்தவரா? என்ற கேள்விகள் எழும். கட்சியில் என்னிடம் கேட்டபோதே என் இயலாமையை சொல்லிவிட்டேன் என்றார் நிர்மலா சீதாராமன்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக இதை சொன்னது பாராட்டத்தக்கது என்றாலும், அவரைப் போன்றவர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும், மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறியவும் முடியும். நிதி மந்திரியே தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை என்று கூறும்போது மக்கள் சேவையாற்ற விரும்பும் ஏழை, நடுத்தர மக்களால் தேர்தலில் போட்டியென்பது எட்டாக்கனிதானோ! என்ற உணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆக தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்