மேகதாது பிரச்சினை இப்போது தேவையா?

‘கடலிலே நீர்வற்றினாலும் வற்றுமே தவிர, காவிரி பிரச்சினை ஒருபோதும் வற்றாது’ என்பதுபோல, ஒரு பிரச்சினை தீர்ந்தால் மற்றொரு பிரச்சினை தலையெடுத்து விடுகிறது.;

Update:2023-06-06 02:16 IST

'கடலிலே நீர்வற்றினாலும் வற்றுமே தவிர, காவிரி பிரச்சினை ஒருபோதும் வற்றாது' என்பதுபோல, ஒரு பிரச்சினை தீர்ந்தால் மற்றொரு பிரச்சினை தலையெடுத்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, மேகதாது அணையை கட்டப்போகிறோம் என்ற ஒரு புது குண்டை கர்நாடக அரசாங்கம் போட்டுவருகிறது. மேகதாது என்பது காவிரி டெல்டா பகுதியை ஒன்றுமில்லாமல் அழித்துவிடும் ஒரு அணுகுண்டாகும். கர்நாடக மாநிலத்தில் காவிரி உருவானாலும், பெரும்பகுதி தமிழ்நாட்டில்தான் ஓடுகிறது. காவிரி பெரும் அருவியாக ஆர்ப்பரித்து வந்து கொட்டும் ஒகேனக்கலுக்கு 15 கி.மீ. தூரத்திலிருக்கும் மேகதாதுவில் அணை கட்ட 1980-களில் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த குண்டுராவ் திட்டமிட்டாலும், இதற்கு 2013-ல் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்றவுடன்தான் வேகம் பிடித்தது.

இதை நிறைவேற்றவேண்டும் என்பதில், காங்கிரஸ்-பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் இடையில் பேதம் எதுவுமில்லை. அதிலும் இப்போது கர்நாடக துணை முதல்-மந்திரியாக இருக்கும் டி.கே.சிவகுமார் மற்ற எல்லோரையும்விட, இத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் வேகம் காட்டுகிறார். 2018-ல் நீர்வளத்துறை மந்திரியாக இருந்தபோதே, இதை எப்படியும் நிறைவேற்றுவேன் என முழங்கினார். காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது டி.கே.சிவகுமார் தலைமையில், 'நம்ம தண்ணீர்; நம்ம உரிமை' என்ற முழக்கத்தோடு ஒரு பாதயாத்திரை நடத்தப்பட்டது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக அவர் பொறுப்பேற்றவுடன் நடத்திய முதல் போராட்டம் இது. இதை அரசியல் லாபத்துக்காக அவர் பயன்படுத்திக்கொண்டார்.

இப்போராட்டத்தின் எதிரொலியாக, அப்போது பதவியில் இருந்த பா.ஜ.க. அரசாங்கம், மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடியை ஒதுக்கியது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து தேர்தல் வந்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், மேகதாது அணை கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியானார். நீர்வளத்துறையும் அவர் பொறுப்பிலேயே இருக்கிறது. பதவியேற்றவுடனேயே அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அவர், மேகதாது திட்டத்தை விரைவுபடுத்தும்படி உத்தரவிட்டார். "மேகதாது அணையை எப்படியும் கட்டியே தீருவோம், இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை", என்று கூறினார். அவரது பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'மேகதாது நோக்கி பாதயாத்திரை செல்வோம்' என்று கூறியிருக்கிறார். 'கர்நாடகா தேர்தலின்போதே நான் மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொன்னேன். அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்காவிட்டால் பா.ஜ.க. தடுத்து நிறுத்தும்' என்று கூறியுள்ளார். நீரு பூத்த நெருப்பாக இருந்த இந்த பிரச்சினையை டி.கே.சிவகுமார் பற்ற வைத்துவிட்டார். இப்போது இது அரசியலாகிவிட்டது. அணை கட்டுவது என்றாலும், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டமுடியாது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் தேவை. எது எப்படி இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா இரு அரசுகளும் நட்பு அரசுகள். அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வும் கூட்டணி கட்சிகள், தோழமை கட்சிகள். எனவே, இரு மாநிலங்கள், இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள நல்லுறவின் மூலமே இந்த பிரச்சினைக்கு உட்கார்ந்து பேசி சுமூக தீர்வு காணவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்