தகுதியுள்ள ஒருவர் பெயரும் விடுபடக்கூடாது
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பெயர்கள் இடம்பெறவில்லை என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இனி அவர்கள் பெயரில் யாரும் கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால் வரவேற்புக்குரியது. அடுத்து 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி மாறியிருக்கிறார்கள் அல்லது ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ள முகவரியில் அவர்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதவிர ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இருப்பவர்கள் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த மாதம் 18-ந்தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ நிரப்பி அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடமோ, சிறப்பு முகாம்கள் நடக்கும்போதோ கொடுக்கவேண்டும். ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யலாம். இதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் முகவரி மாறியிருக்கிறோம், அதாவது வீடு மாறியிருக்கிறோம் என்பவர்கள் படிவம் 8-ஐ கொடுத்து தங்கள் பெயர்களை புது முகவரியில் சேர்த்து கொள்ளமுடியும். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவேண்டுமென்றால் அதாவது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இறந்தவர்கள் பெயரை நீக்க படிவம் 7-ஐ நிரப்பி தரவேண்டும்.
அனைத்தையும் பரிசீலித்து பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடமுடியும். அந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நிச்சயமாக ஓட்டு போடமுடியாது. இதுதான் அவர்களுக்கு கடைசி வாய்ப்பு. அந்த பட்டியல் வெளியானவுடன் புது வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் மிக விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிவிடும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்தும் வாக்காளர் அடையாள அட்டையை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். இதற்கிடையே புதிய சிக்கலாக, கணக்கெடுப்பு படிவம் கொடுத்தபோது 2002, 2005-ல் எந்த தொகுதியில் வாக்காளர்களாக இருந்தார்கள்? என்பதனை பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு வழங்கும் பணியினை தொடங்கியிருக்கிறது.
அந்த வாக்காளர்கள், நேரில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும். அப்போதுதான் இறுதி பட்டியலில் அவர்களது பெயரும் சேரும். எனவே அதில் வாக்காளர்களுக்கும், தங்களது பெயரை சேர்க்கவேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. ஏற்கனவே சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் முகவரி மாறியவர்கள் பெயரை நீக்க தேர்தல் ஆணையம் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டதோ, அதே தீவிரத்தை அவர்கள் பெயர்களை சேர்ப்பதிலும் காட்டவேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1.65 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மொத்தத்தில் தகுதியுள்ள ஒருவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது.