10, 20, 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு
இப்போது வங்கிகளில் கூட 50, 20,10 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை.;
மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி பண்டமாற்று முறையில் இருந்துதான் தொடங்கியது. பிற்காலங்களில் நாடுகளுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் சென்று பொருட்கள் வாங்கவேண்டிய தேவை ஏற்பட்டதால், அனைவரும் பொதுவாக பயன்படுத்த வசதியாக நாணயங்களின் தேவை ஏற்பட்டது. ஆகவே முதலில் ராஜமுத்திரை போட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் நடைமுறைக்கு வந்தன. இந்தியாவில் நாணயங்களுக்கு பதிலாக ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. நமது நாட்டில் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிடுகிறது. 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1,000, 2,000 என மதிப்புகளில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன.
காலப்போக்கில் முதலில் ரூ.1,000 நோட்டுகளும், சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,000 நோட்டுகளும் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு திரும்பப்பெறப்பட்டன. இந்த நிலையில், டிஜிட்டல் பண பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டு ரூபாய் நோட்டு மூலம் பரிமாற்றம் செய்யும் முறையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் இருந்து எடுக்கவேமுடியாது என்ற நிலை இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அதிக தேவை இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் 500, 200,100, 50, 20, 10, 1 ஆகிய ரூபாய் நோட்டுகள் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ரிசர்வ் வங்கி ரூ.2 மற்றும் ரூ.5 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக 50 காசுகள், 1, 2, 5, 10, 20 ஆகியவற்றை ரூபாயாக அச்சிடாமல் நாணயங்களாக வெளியிட்டது.
ரூ.5, ரூ.10, ரூ.20 மதிப்பிலான நாணயங்களை பல இடங்களில் கடைகளிலும், ஏன் பஸ்களிலும் வாங்க மறுக்கிறார்கள். ரிசர்வ் வங்கி இதை யாரும் வாங்காமல் இருக்கக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டும் செவி சாய்க்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் 500, 200, 100 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடின்றி புழக்கத்தில் உள்ளன. ஆனால் சிறிய தொகையான 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போது வங்கிகளில் கூட 50, 20,10 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் கடந்த ஆண்டு இந்த மதிப்பிலான நோட்டுகள் மட்டும் ஏறத்தாழ 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தது.
குறைந்த விலையில் சிறிய மதிப்பிலான பொருட்களை வாங்குவதற்கும் ஆட்டோ, பஸ் கட்டணங்களை செலுத்துவதற்கும், அன்றாட தேவைகளுக்கும் ஏழை கிராம மக்கள் மளிகை, காய்கறி வாங்குவதற்கும், குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது பென்சில், ரப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்களை வாங்குவதற்காக கொடுப்பதற்கும் இந்த ரூபாய் நோட்டுகள் அத்தியாவசிய தேவையாகும். ஓட்டல்களில் இட்லி வாங்குவதற்கும் இந்த ரூபாய் நோட்டுகள் மிகவும் அவசியமாகும். எனவே ரிசர்வ் வங்கி மக்களின் அத்தியாவசிய தேவையை அறிந்து, குறிப்பாக ஏழை, கிராம, நடுத்தர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை தேவையான அளவு அச்சிட்டு உடனடியாக புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.