இதற்கு போய் அங்கீகாரம் ரத்தா?
மருத்துவத்தையும், கல்வியையும் இரு கண்களாக பாவித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.;
மருத்துவத்தையும், கல்வியையும் இரு கண்களாக பாவித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கில், பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் மூலம் வீடு தேடிவந்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகள் வீட்டுக்கே வந்து செய்யப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்கள் காரணமாக, டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
தற்போது 37 அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுகிறார்கள். இந்த இடங்களைப் பிடிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வை எழுதி, அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். அரசு மருத்துவ கல்லூரிகள் இன்னும் அதிகமாக தொடங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ள நேரத்தில், தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி, திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள 500 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியிலும் 150 மாணவர்களை சேர்க்க முடியாத நிலையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ கல்லூரி வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை எதிர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய வழி இருக்கிறது என்றாலும், இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தைப்பார்த்தால், இதற்குப்போய் அங்கீகாரம் ரத்தா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஏதாவது முறைகேடு நடந்து, அதற்காக நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நடவடிக்கை சரிதானே என்று நினைக்கலாம். ஆனால், மருத்துவ கல்லூரி வாரிய இயக்குனர் இந்த கல்லூரி முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆதார் அடிப்படையிலான கைரேகை வழி மாணவர் வருகைப் பதிவேடு இல்லை, கண்காணிப்பு கேமரா செயல்பாடு திருப்தியாக இல்லை என்று சாதாரண காரணங்களைக் குறிப்பிட்டு, இதற்காக அங்கீகாரத்தை ரத்து செய்கிறோம் என்று எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சாதாரண குறைகளாகும். இந்த சின்ன குறைகளெல்லாம் இப்போது சரி செய்யப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த அங்கீகாரம் ரத்து என்பது விரைவில் நீக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடியும், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து முறையிட இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சரியில்லை என்றாலும், இதுபோன்ற சிறிய குறைகள்கூட இல்லாமல் இருப்பதை மருத்துவ கல்லூரிகள் உறுதி செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல், மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருக்கும் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் அந்த காரணத்தையும் சொல்லி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள், டாக்டர்கள்.