65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு

மருத்துவ செலவு என்பது யாருக்கும் எதிர்பாராத நேரத்தில்தான் வரும்.

Update: 2024-05-23 00:49 GMT

நம் வாழ்வில் எதிர்வரும் செலவுகள் என்ன என்பது முன்கூட்டியே தெரிந்துபோனால், அதற்கான பணத்தை தயார் செய்ய வசதியாக இருக்கும். ஆனால், மருத்துவ செலவு என்பது யாருக்கும் எதிர்பாராத நேரத்தில்தான் வரும். அப்படி திடீரென வரும்போது, ஆபத்பாந்தவனாக உதவிக்கரம் நீட்டுவது மருத்துவ காப்பீடுதான்.

இந்த திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துதான் தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இப்போது நடைபெற்று வரும் 18-வது மக்களவை தேர்தலுக்காக பா.ஜனதாவுக்கென பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களையும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து இருந்தார். இது எல்லோருக்கும் கிடைக்காது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு மட்டும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டுவது தனியார் நிறுவனங்களின் மருத்துவ காப்பீடு திட்டம்தான்.

இன்றைய காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல், இளைய சமுதாயத்தினர் கூட 'மெடிகிளெய்ம்' என்று சொல்லப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து மருத்துவ செலவை சரிக்கட்டி விடுகிறார்கள். மருத்துவ காப்பீடு இருந்தால், அவசர சிகிச்சைக்காக எந்த தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்து காப்பீட்டு தொகையில் இருக்கும் பணத்தின் அளவுக்கு சிகிச்சை பெற முடியும். ஆனால், இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர வயது வரம்பு 65 தான். அதற்கு மேல் வயதானவர்கள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர முடியாது.

அதே நேரத்தில், 63 வயதில் ஒருவர் 'மெடிகிளெய்ம்' பாலிசி எடுத்திருந்தால், அவர் அதை தன் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளலாம். இப்போது வாழ்நாள் காலம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் இருக்கிறது. இதில் பலர் 65 வயதுக்குள் மருத்துவ காப்பீடு எடுத்திருக்க மாட்டார்கள். 65 வயதுக்கு மேல்தான் முதுமை காரணமாக அவர்களுக்கு மருத்துவ செலவு வரத்தொடங்கும். அந்த நேரத்தில் கையில் பணமும் இல்லாமல், மருத்துவ காப்பீடும் இல்லாமல் திணறுவார்கள்.

இப்போது மத்திய அரசாங்கத்தின் இன்சூரன்சு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூத்த குடிமக்களுக்கு உதவ மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பை நீக்கியுள்ளது. இனி எந்த வயதினரும் புதிதாக மருத்துவ காப்பீட்டில் சேர முடியும். இது வரவேற்கத்தக்கதாக தெரிந்தாலும், திட்டத்துக்குள் போய் பார்த்தால் மகிழ்ச்சி இல்லை. காரணம் இந்த மருத்துவ காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் தொகை மிக அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பாலிசிக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் கட்டவேண்டும். அதுபோல, வயது அதிகரித்தால் பிரீமியம் தொகையும் உயருகிறது. விதிக்கப்படும் நிபந்தனைகளும் கடுமையாக இருக்கிறது.

ஏற்கனவே, ஏதாவது நோய் இருந்தால், நிபந்தனை அடிப்படையில் பாலிசி வழங்கப்படுமானால் 3 ஆண்டுகள் வரை அந்த நோய்க்கு மருத்துவ காப்பீடு கிடையாது. மூத்த குடிமக்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை. எனவே, இத்தகைய நிபந்தனைகளை தளர்த்தவேண்டும். மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியத்தின் மீது வசூலிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வீதத்தை குறைக்கவேண்டும். முடிந்தால் ரத்து செய்யவேண்டும். வாய்ப்பு இருந்தால் பிரீமியம் தொகையையும் குறைக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்