விமான நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
விமான போக்குவரத்து அமைச்சகமும், இண்டிகோ நிறுவனமும் விமான பணி நேர வரையரை விதி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.;
ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. ஆனால் இப்போது விமான பயணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது. அமெரிக்காவில் விமான கட்டணம் என்பது சாதாரண மனிதனின் 1.1 நாள் சம்பளமாகும். இது சீனாவில் 3.7 நாள் சம்பளம் ஆகவும், இந்தியாவில் 17 நாட்கள் சம்பளமாகவும் உள்ளது. இவ்வளவு அதிகமான கட்டணம் இருந்தாலும் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமான சேவை எல்லா இடங்களுக்கும் இருப்பதால் மக்கள் விமான பயணத்தை அதிகமாக நாடுகிறார்கள். இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் 60 சதவீத சேவைகள் இண்டிகோ விமானங்களால்தான் நடக்கிறது. இந்த நிறுவனத்தின் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள், தினமும் 2,300 விமான சேவைகள் அளிக்கின்றன. உள்நாட்டில் 90-க்கும் மேற்பட்ட இடங்களுக்கும், வெளிநாடுகளில் 45-க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் இண்டிகோ விமானங்கள் செல்கின்றன. கடந்த 4 நாட்களாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சொல்லொண்ணா இடர்பாடுகளால் அவதிப்படுகிறார்கள்.
நேற்று மட்டும் டெல்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவு வரை புறப்படவேண்டிய அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் மும்பையில் 104, ஐதராபாத்தில் 92, பெங்களூருவில் 192 விமான சேவைகளும் ரத்தாகின. நேற்று முன்தினம் மட்டும் மும்பையில் 85, பெங்களூருவில் 73, ஐதராபாத்தில் 68, சென்னையில் 31, டெல்லியில் 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நிறைய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகின. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களில் ஓரங்கட்டப்பட்டு பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொண்டு நிறுத்தப்படுவதால் மற்ற நிறுவன விமானங்கள் நிறுத்தவும் இடம் இல்லாததால் அந்த சேவைகளும் பாதிக்கப்பட்டன. விமானிகளின் களைப்பை குறைப்பதற்கு விமான பணி நேர வரையரை விதிகளை அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்தது.
ஆனால் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தான் தீர்ப்பளித்தது. அதன்படி, இந்த விதிகள் 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன. வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரிப்பது தொடர்பான விதிகள் கடந்த ஜூலை 1-ந்தேதியும், கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் இரவு நேரத்தில் விமானிகளை பயன்படுத்துவது போன்ற பல வரையறைகளும் நடைமுறைக்கு வந்தன. இந்த புதிய விதிகளின்படி, விமானிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யமுடியாமல் இண்டிகோ நிறுவனம் தடுமாறுவதாலும், விமானிகள் பற்றாக்குறை இருப்பதாலுமே அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதனால் விமானத்தில் பயணிக்க வரும் பயணிகளால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறது. இதனால் பயணிகள் துயரத்தை சந்தித்து வருகின்றனர். என்னதான் கட்டணத்தை திரும்பக்கொடுத்தாலும் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்ளமுடியாமல் தவிக்கிறார்கள். இதற்கிடையில் விதிகளில் இருந்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சில தளர்வுகளை தந்துள்ளது. இருந்தாலும் இயல்பு நிலை திரும்ப பிப்ரவரி 10-ந்தேதி ஆகும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகமும், இண்டிகோ நிறுவனமும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அவசரத்துக்கு விமான பயணத்துக்கு வசதி செய்து கொடுக்கவேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும்.