அவர்களுக்கு உயர்வு; இவர்களுக்கு இல்லையா?

அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்வை சரிக்கட்டி விடும்.

Update: 2024-03-18 00:51 GMT

சென்னை,

தேர்தல் நேரங்களில் சலுகை மழை கொட்டோ கொட்டென்று பெய்யும். இதில் எந்த அரசாங்கமும் விதி விலக்கல்ல. அந்த வகையில், எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலை நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்து அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. இப்போது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வும், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 4 சதவீத அகவிலை நிவாரணமும் வழங்கப்படும் என மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்குரிய ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அனைத்து மத்திய அரசாங்க ஊழியர்களும் பென்ஷன் வாங்குபவர்களும் அடுத்த மாதம் சம்பளமோ, பென்ஷனோ வாங்கும்போது இந்த 3 மாதங்களின் அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையையும் சேர்த்து வாங்குவார்கள். இப்போது 46 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி இனி 50 சதவீதமாகிவிடும். அந்த தொகையும் அடிப்படை சம்பளத்தோடு சேர்க்கப்பட்டுவிடும். இனி அகவிலைப்படி பூஜ்யத்தில் இருந்து உயர்த்தப்படும். இதனால் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு மற்ற பணப்பலன்களும் தானாக உயர்ந்துவிடும்.

7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி, பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்துவிட்டால், வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி மற்றும் போக்குவரத்துப்படி, பயணப்படி, சீருடை பணியாளர்களுக்கான சீருடைப்படி, வெளியூருக்கு அலுவலக பணி காரணமாக செல்லும்போது தங்கும் வசதிக்கான படி போன்ற பல அலவன்சுகளும், ஓய்வு பெறும்போது பெறும் கருணைத்தொகையும் உயர்ந்து விடும். இப்படி இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு அனைத்து வகையிலும் உயர்வுதான். இந்த அகவிலைப்படி உயர்வினால் 49.18 லட்சம் மத்திய அரசாங்க ஊழியர்களும், 67.95 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து 16 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கும் இனி அகவிலைப்படி 50 சதவீதமாகிவிட்டது.

மத்திய அரசாங்கத்திலும் சரி, தமிழக அரசிலும் சரி பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையைவிட, ஓய்வுபெற்று பென்ஷன் வாங்குபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இப்போதுள்ள சமுதாயத்தில் இருக்கும் மருத்துவ வசதி மற்றும் மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு காரணமாக, அரசு ஊழியர்களின் ஆயுட்காலம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக உயரும் என்பதால், வரப்போகும் ஆண்டுகளில் பென்ஷன்தாரர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிக்கொண்டேயிருக்கும்.

அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, விலைவாசி உயர்வை சரிக்கட்டி விடும். இதுபோல, வங்கி ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள 17 சதவீத சம்பள உயர்வு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திவிடும். இவர்களுக்கு அளிக்கப்பட்ட உயர்வு மகிழ்ச்சிதான். ஆனால், அரசு பணியில் இல்லாமல் மற்ற வேலைகளைப்பார்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சேமித்து முதிர் வயதில் வாழும் மற்ற குடிமக்களுக்கான சேமிப்பு வட்டியை மட்டும் உயர்த்தாமல் அப்படியே வைத்திருந்தால், அவர்களால் எப்படி வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட முடியும்?. விலைவாசி உயர்வில் இருந்து காப்பாற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுபோல, இவர்களுக்கும் செய்ய வேண்டாமா? விலைவாசி உயர்வு இருபாலருக்கும் பொதுதானே என்ற குரலும் கேட்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்