கவர்னர்கள் - முதல்-மந்திரிகள் இடையே உள்ள உறவு !

இந்திய அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவு, ‘மாநிலத்திற்கு ஒரு கவர்னர் இருக்கவேண்டும்’ என்றும், 155-வது பிரிவு, ‘கவர்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்படவேண்டும்’ என்றும் கூறுகிறது.

Update: 2022-11-18 20:20 GMT

இந்திய அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவு, 'மாநிலத்திற்கு ஒரு கவர்னர் இருக்கவேண்டும்' என்றும், 155-வது பிரிவு, 'கவர்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்படவேண்டும்' என்றும் கூறுகிறது. கவர்னர் பதவி என்பது சுதந்திரம் அடைவதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது. முகலாய மன்னர்கள் தங்கள் பரந்த சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க கவர்னர்களை வைத்திருந்தனர். தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும் கவர்னர்கள் நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றினர்.

சுதந்திர இந்தியாவில், கவர்னர் பதவி தேவை என்றும், தேவை இல்லை என்றும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. மறைந்த அறிஞர் அண்ணாகூட, 'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை' என்று பேசியிருக்கிறார். ஆனால், மாநில கவர்னர் என்பவர், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு இணைப்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பல நிர்வாக கடமைகள் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கிறார். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் அவரது உரை இருக்கும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலின்பேரிலேயே சட்டமாகின்றன. மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய 1983-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா கமிஷன், ஒரு மாநிலத்தில் கவர்னரை நியமிக்கும் முன்பு முதல்-மந்திரியை கலந்தாலோசிக்கவேண்டும் என்று பரிந்துரை அளித்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய கமிஷன், துணை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, மக்களவை சபாநாயகர், சம்பந்தப்பட்ட முதல்-மந்திரி கொண்ட குழு அமைக்கப்பட்டு கவர்னரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், இப்போது பல மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார், அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் முரண்படுகிறார், அதிகார வரம்பை மீறுகிறார், சமூக பதற்றத்தை தூண்டும் வகையில் பேசுகிறார், மதவெறுப்பை தூண்டி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பது உள்பட பல புகார்களைக்கூறி, அவரை திரும்பப்பெறவேண்டும் என்று கோரி தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு மனு வழங்கியுள்ளனர்.

கேரளாவில் கவர்னருக்கும், அரசாங்கத்துக்கும் மோதல் முற்றிவிட்டது. பல்கலைக்கழக வேந்தர்களாக கவர்னருக்கு பதிலாக புகழ்பெற்ற கல்வியாளர்களை நியமிக்கும் அவசர சட்டத்தை கவர்னர் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு, தன்னை மதிப்பதில்லை என்று கவர்னர் டாக்டர் தமிழிசை வெளிப்படையாகவே சொல்லிவருகிறார். அவர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று மாநில அரசு குறைகூறுகிறது. இதுபோல, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் மனக்கசப்பு இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்த, தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஜக்தீப் தன்கர் காலத்தில், சுமுக உறவு இல்லாத நிலையில், தற்போது பொறுப்பு கவர்னராக இருக்கும் இல.கணேசனோடு நல்லுறவு திகழ்கிறது.

கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் இடையே உள்ள உறவு தென்றலாக இருந்தால்தான் மக்களுக்கு பயன் அளிக்கும் நல்ல திட்டங்களை இருவரும் சேர்ந்து வேகமாக நிறைவேற்ற முடியும். பல நேரங்களில் இந்த உறவு சகோதர உறவுக்கு மேல் இருந்திருக்கிறது. ஜனநாயகம் தழைக்க இந்த உறவு நல்லுறவாக இருக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்