தாங்கமுடியாத விலைவாசி உயர்வு

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே தக்காளி உள்பட காய்கறி, மளிகை பொருட்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துவிட்டது.;

Update:2023-07-10 01:16 IST

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே தக்காளி உள்பட காய்கறி, மளிகை பொருட்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துவிட்டது. சமையலில் மிக முக்கியமான பொருட்கள் வெங்காயமும், தக்காளியும்தான். இது இரண்டும் இல்லாமல், எந்த சமையலையும் இல்லத்தரசிகளால் செய்ய முடியாது. வெங்காயத்தை உரிக்கும்போதுதான் கண்ணீர் வரும் என்ற நிலைக்கு மாறாக, இப்போது தக்காளி, வெங்காயம் விலையைக்கேட்டாலே கண்ணீர் வருகிறது.

சரி, தக்காளி - வெங்காயம் விலைதான் உயர்ந்து இருக்கிறது, மற்ற காய்கறியைக்கொண்டாவது சமாளிக்கலாமே என்று பார்த்தால், எல்லா காய்கறியின் விலையும் சொல்லி வைத்தாற்போல உயர்ந்துவிட்டது. பச்சை மிளகாய், இஞ்சி என்று தொடங்கி எந்த காய்கறிப்பக்கம் போனாலும், அதன் விலை எட்டாதூரத்துக்கு போய்விட்டது. தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் குறைவுதான், பெரும்பாலான காய்கறிக்கு வெளி மாநிலங்களையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அந்த மாநிலங்களில் பெய்த கனமழை உள்பட பல்வேறு காரணங்களால், அங்கும் விளைச்சல் பாதிக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டுக்கு வரத்து இல்லை.

காய்கறி விலைதான் விண்ணை தொட்டுவிட்டது, மளிகை பொருட்கள் விலையாவது கட்டுக்குள் இருக்கிறதா? என்று பார்த்தால், அனைத்து மளிகை பொருட்களின் விலை உயர்வும் மனதை சங்கடப்படுத்தும் வகையில் இருக்கிறது. இப்போது உயர்ந்திருக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை பட்டியலைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏற்கனவே உயர்ந்திருக்கும் அரிசி விலை, இப்போது கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து விட்டது. பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாசுமதி அரிசி விலை கிலோவுக்கு ரூ.40-க்கு மேல் உயர்ந்துவிட்டது. போனமாதம் மராட்டியம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்துவரும் நாட்டு பூண்டு, அதிகபட்சமாக கிலோ ரூ.80 ஆக இருந்தது, இப்போது கிலோ ரூ.250-க்கு போய்விட்டது. பழங்கள் விலையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது.

உழைத்து ஊதியம் பெறுகிறவன் மனிதன் மட்டுமே. அவன் ஊதியத்துக்கேற்ப செலவினம் இருந்தால்தான், அவனால் செழித்து வளர முடியும். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களும், நடுத்தர குடும்பங்களில் வாழ்பவர்களும் அதிகம். அவர்களெல்லாம் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்துபவர்கள். சரியான வகையில் செலவுகள் இருந்தால்தான், அவர்கள் வாழ்க்கை பரிமளிக்கும். இப்போது அனைத்து மளிகை, காய்கறி விலையோடு, மின்சார கட்டண உயர்வும், எரிபொருட்களின் விலையும் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது. மாதத்துக்கு ஒருமுறை சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கிறது. குடும்பங்கள் பல்லைக்கடித்துக்கொண்டு பரிதாபமான நிலையில் வண்டியை ஓட்டுகிறார்கள். ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று பல குடும்பங்களில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்திவிட்டு போய்விட்டது.

இந்த சூழ்நிலையில், அனைத்து பொருட்களின் விலை உயர்வும் கண்களை பிதுக்குவதாக இருக்கிறது. அடிப்படை பொருட்களின் விலை உயர்வால், சேவை கட்டணங்களும் அதிகரிக்கின்றன. வரவுக்கு மேல் செலவு அதிகமாகிவிட்டதால், மக்கள் கடன் தொல்லையில் தத்தளிக்கிறார்கள். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் ஒன்றாக ஆலோசனை செய்து, போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிக விளைச்சல் உள்ள மாநிலங்களில் இருந்து, பற்றாக்குறை மாநிலங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவேண்டும். அனைத்து பருவ காலங்களிலும் அனைத்து காய்கறி விளைச்சலுக்கும் சீனா போல, பசுமை கூடார சாகுபடி முறையை கொண்டுவரவேண்டும். மொத்தத்தில் விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களை கைதூக்கிவிடவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்