நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

Update: 2024-04-19 06:28 GMT

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க சென்ற இருவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதைபோல சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (59) என்ற முதியவர் வாக்குசெலுத்த வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்