நடிகர் ரோபோ சங்கர் மறைவு - பாடகர் அந்தோணி தாசன் கொடுத்த அறிவுரை

ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.;

Update:2025-09-19 12:22 IST

சென்னை,

டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார். ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பாடகர் அந்தோணி தாசன் ரோபோ சங்கரின் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில்,“மது அருந்துபவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒரு மிகப் பெரிய மனிதனை இந்த குடும்பம் இழந்து நிற்கிறது. பேரனை கொஞ்சி சந்தோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் உயிரிழந்துள்ளார். குடிதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் இவரின் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்