பெண்களை இழிவுபடுத்தும் பாடல் வரிகள்.. பாடகர் ஹனி சிங் மீது நடிகை நீது சந்திரா புகார்
'மனியக்' என்ற பாடலுக்காக ஹனி சிங் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.;
மும்பை,
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஹனி சிங். இவர் அனிருத் இசையில் 'எதிர்நீச்சலடி' பாடல் மூலமாக நமக்கு அறிமுகமானார். எதிர்நீச்சல் படம் மூலம் நமக்கு இவர் அறிமுகமாகி இருந்தாலும், அதற்கு முன்பே பாலிவுட்டில் பெரிய பாடகராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட "இன்டர்நேஷனல் வில்லேஜர்" என்கிற ஆல்பம் பாடல் ஆசியா கண்டம் முழுவது பேசப்பட்டது. ஒரே பாட்டில் பணக்காரன் ஆகிட்டான் என்று சொல்கிறதுபோல ஹனி சிங்கும் இந்த ஒரே பாட்டு மூலமாக உலகம் முழுவது பிரபலமானார்.
பாலிவுட்டில் அதிகமான ஹிட் பாடல்களை இவர் பாடி இருந்தாலும், பிரத்யேகமாக தயாரித்து வெளியிடும் ஆல்பம் சாங் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளனதாவே இருந்திருக்கின்றன.
அதன்படி, கடந்த 2018 ம் ஆண்டு 'மக்னா' என்ற பாடலில் பெண்களை இழிவுபடுத்தும்படியான வரிகளுக்காக ஹனி சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 'மனியக்' என்ற பாடலுக்காக ஹனி சிங் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அதன்படி, நடிகை நீது சந்திரா இப்பாடல் பெண்களை ஒரு போக பொருளாக சித்தரிப்பதாக கூறி ,பாடகர் ஹனி சிங் , பாடலாசிரியர் லியோ கிரேவால்,போஜ்புரி பாடகர்கள் ராகினி, அர்ஜுன் அஜபானி மற்றும் பாடல் வெளியிட்ட நிறுவனம் மீது பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.