முதியோர் இல்லத்தில் கஷ்டப்படும் 100 படங்களில் நடித்த நடிகை
சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்ட நடிகை வாசுகி தற்போது ஆந்திர முதியோர் இல்லத்தில் உள்ளார்.;
தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வாசுகி. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த வாசுகி ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட வாசுகி சினிமா மீது கொண்ட ஆர்வத்தில் திரை உலகில் கடும் போராட்டத்துக்கிடையே அறிமுகமானார். அதேபோல ‘வேலை கிடைச்சாச்சு’ படத்தில் ஆசிரியை என்று கவுண்டமணியிடம் ஏமாற்றும் காட்சிகளும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ‘ரிக்ஷா மாமா’ படத்தில் கவுண்டமணி விரட்டி விரட்டி காதலிப்பதும் பின்னர் அவர் பிச்சைக்காரி என தெரிந்ததும் தெறித்து ஓடும் காட்சிகளும் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு அ.தி.மு.க. . நட்சத்திர பேச்சாளராக இருந்தார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்ட வாசுகி மேலும் வறுமையான சூழ்நிலைக்கு ஆளாகி ஒரு பக்கம் நிதி நெருக்கடி இன்னொரு புறம் உடல்நலக்குறைவு என அவதிப்பட்டு வந்தார். இதை தொடர்ந்து வாசுகி நடிகர் சங்கத்தில் உதவிக் கேட்டார். திரை உலகில் பலர் அவருக்கு உதவினர்.
இந்நிலையில் நடிகை வாசுகி ஆந்திர மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தற்போது தங்கி இருக்கிறார். ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் ஆத்ரேயபுரம் போபர் லிங்காவில் உள்ள ஸ்ரீராம முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.
தன் வாழ்க்கை குறித்து வாசுகி “சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய மோகன்பாபு மகன் மஞ்சுவிஷ்ணு எனது நிலையை பார்த்து எனக்கு கண் அறுவை சிகிச்சை செய்தார். ஆந்திர துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் சகோதரர் சிரஞ்சீவி ஆகியோர் ரூ.4 லட்சம் நிதி உதவி அளித்தனர். முதல் மந்திரி சந்திரபாபு, அமைச்சர் லோகேஷ் ஆகியோர் எனக்கு - எல்லா வகையிலும் உதவுகிறார்கள். நான் முதியோர் இல்லத்திற்கு வந்த போது எனது உடல் நிலை மோசமாக இருந்தது. தற்போது உடல்நலம் தேறியுள்ளது” என்றார்.