பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி
என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த கமலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.;
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். ரஜினிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி, தமிழில் பதிவிட்டு ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துகளுக்கு ரஜினிகாந்த், “பிரதமர் நரேந்திர மோடிஜி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், இனிய வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
“என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி” என கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த வருடம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.