'காதி' பட தோல்விக்குப்பின்...அனுஷ்கா எடுத்த முடிவு - ரசிகர்கள் வருத்தம்
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனுஷ்காவின் ''காதி'' படம் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது;
சென்னை,
நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக ஊடகங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். சக நடிகைகளைபோல சமூக வலைதளத்தில் இவர் ஆக்டிவாக இருந்ததில்லை என்றாலும், சமீபத்தில் தனது ''காதி'' படத்தை விளம்பரப்படுத்த எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. இதனையடுத்து அவர் தனது அடுத்த படத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அனுஷ்காவின் அறிவிப்பு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அனுஷ்கா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தபோவதாகவும் , அதனால் சிறிதுகாலம் சமூக வலைதளத்தில் இருந்து விலக விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இன்னும் அதிக படங்களுடனும் , அன்புடனும் விரைவில் சந்திப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.