"பன் பட்டர் ஜாம்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-07-22 06:43 IST

சென்னை,

ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினியும் தோழிகள். ஒரே அபார்ட்மெண்டில் குடியிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் காதல் கீதல் என்று கெட்டுபோய் விடக்கூடாது என்று எண்ணி, ராஜு-ஆதியா இடையே காதலை வளர்க்கவும், அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் திட்டம் போடுகிறார்கள்.

இதற்கிடையில் கல்லூரிக்கு செல்லும் ராஜு, பவ்யாதிரிகாவை காதலிக்கிறார். ஆதியாவும், பப்புவை காதலிக்கிறார். இரண்டு காதலிலும் சிக்கல்கள் முளைக்கிறது. பிரச்சினைகள் வெடிக்கிறது. இறுதியில் காதலர்களின் நிலை என்ன? அவர்களின் பிரச்சினை தீர்ந்ததா? அம்மாக்களின் திட்டம் பலித்ததா? என்பதே நகைச்சுவை நிறைந்த மீதி கதை.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ராஜு செய்யும் கலாட்டாக்களும், அவரது 'டைமிங்' காமெடிகளும் ரசிக்க வைக்கிறது. 'எமோஷனல்' காட்சிகளிலும் தன்னை நடிகனாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அழகான கதாநாயகிகளாக பவ்யாதிரிகா, ஆதியா பிரசாத் கலக்கி இருக்கிறார்கள். ஈ.சி.ஆரில் அரங்கேறும் காதல் கூத்துகள் காமெடி கலாட்டா.

சரண்யா பொன்வண்ணனும், தேவதர்ஷினியும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். இருவரும் தோன்றும் காட்சிகள் கலகலப்புக்கு 'கியாரண்டி'. சார்லியின் அனுபவ நடிப்பு கைகொடுத்துள்ளது. ஓரிரு காட்சிகளே வந்தாலும் விக்ராந்த் வலு சேர்க்கிறார். மைக்கேல், பப்பு, லங்கேஷ், நிஹாரிகா, பாரதி உள்ளிட்ட அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.

பாபு குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை மனதை வசீகரிக்கிறது. பின்னணி இசையும் வருடல். கலாட்டா நிறைந்த திரைக்கதை பலம். இரண்டாம் பாதியில் வேகம் குறைவு. எதார்த்தம் என்ற பெயரில் இலக்கணம் மீறலாமா...

காதல், எமோஷனல் கலந்த திரைக்கதையில், கலகலப்பான படம் இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ராகவ் மிர்தாத்.

பன் பட்டர் ஜாம் - நம்பி சாப்பிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்