நாஞ்சில் விஜயன் மீதான வழக்கு வாபஸ்! - சமரசமான திருநங்கை வி.ஜே. வைஷு
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.;
சென்னை,
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர், 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு ஒருவர் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில்," நானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி கொண்டார். திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாஞ்சில் விஜயன் மறுப்பு தெரிவித்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. பல பிரபலங்கள் வி.ஜே. வைஷுக்கு ஆதரவாகப் பேசினர். சிலர் நாஞ்சில் விஜயனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். நடவடிக்கை தேவையில்லை, சமாதானமாக செல்வதாக கூறி எழுத்துப்பூர்வமாக வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். இதன் நகலை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.