படத்தில் நடிக்க வராமல் ‘டிமிக்கி' கொடுத்ததால் நடிகை லட்சுமி மேனன் அதிரடி நீக்கம்
படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தயாரிப்பு குழு, லட்சுமி மேனனை படத்தில் இருந்தே நீக்கியிருக்கிறார்கள்.;
சென்னை,
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வேகமாக முன்னேறிய நடிகை லட்சுமி மேனன், இடையில் சில ஆண்டுகள் மாயமானார். பின்னர் மீண்டும் நடிக்க வந்த லட்சுமி மேனனுக்கு படங்களும் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் உள்ள ஒரு பாரில் நடந்த கோஷ்டி மோதலில் லட்சுமி மேனனின் பெயரும் அடிபட்டது. இதில் அவர் தலைமறைவு ஆனார். பின்னர் முன்ஜாமீன் பெற்றார். அப்படி, இப்படி என ஒருவழியாக வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க லட்சுமிமேனன் ஒப்பந்தமானார். காமராஜ் என்பவர் இயக்கும் இந்த புதிய படத்தில் நட்டி, விதார்த் உள்ளிட்டோரும் நடிக்கவிருந்தனர். மலேசியாவில் படத்தின் பூஜையும் நடந்தது. ஆனால் படப்பிடிப்பில் லட்சுமி மேனன் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல், அறையிலேயே ‘எழுந்திருக்கவே முடியாதபடி' ஒருவிதமான மயக்கத்தில் கிடந்தாராம். காலை 9 மணி படப்பிடிப்புக்கு மதியத்துக்கு மேல் வர தொடங்கினாராம். இனியும் சரிபட்டு வராது என்று நினைத்த தயாரிப்பு குழு, லட்சுமி மேனனை படத்தில் இருந்தே நீக்கியிருக்கிறார்கள். அவருக்கு பதிலாக ‘கயல்' ஆனந்தி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.