தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி
‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.;
‘ஜனநாயகன்’ வெளியாகததால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார். ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் புதிய தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், ‘தெறி’ ரீ-ரிலீஸ் அறிவிப்புக்குப் பிறகு, அதே நாளில் வெளிவரும் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளர் எஸ். தாணுவிடம் ஒரு தனிப்பட்ட கோரிக்கை விடுத்தார். ‘திரௌபதி 2’ திரைப்படம் அதே நாளில் வெளிவருவதால், இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதைத் தவிர்க்க, ‘தெறி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றக் கோரினார். இந்த கோரிக்கையை எஸ். தாணு ஏற்று, ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி “எங்களின் வேண்டுகோளை ஏற்று விஜய் சாரின் தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரௌபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், ‘திரௌபதி 2’ திரைப்படம் தனது திட்டமிட்ட ரிலீஸ் நாளில் பிரச்சினையின்றி வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.