இளையராஜாவுக்கு பத்மபாணி விருது அறிவிப்பு
இளையராஜாவுக்கு அஜந்தா- எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளது.;
அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் மிக முக்கியமான விருதாக பத்மபாணி கருதப்படுகிறது. 11-வது அஜந்தா எல்லோரா திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது. திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நந்த்கிஷோர் கக்லிவால், தலைமை ஆலோசகர் அங்குஷ்ராவ் கதம், மற்றும் இயக்குநருமான அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் இணைந்து பத்மபாணி விருது பெறுபவரை அறிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான பத்மபாணி விருது தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவாரிகர் , விமர்சகர் லத்திகா பட்கோங்கர், சுனில் சுக்தங்கர், மற்றும் சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த விருது, விருது சிற்பம், பாராட்டு பத்திரம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்பார்கள். திரைப்பட விழா புரோசோன் மாலில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெறும். இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.
பத்மபாணி விருதை பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், எழுத்தாளர் சாய் பரஞ்ச்பை, நடிகர் ஓம் பூரி உள்ளிட்டோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எட்டு நாள் விழாவில் கிட்டத்தட்ட 70 படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.