‘பெண்களை எள்ளி நகையாடாதீர்கள்' - ‘பேட் கேர்ள்' பட நடிகை ஆதங்கம்

சமூகத்தில் பெண்களுக்கு அநீதி நடந்து வருவதாக நடிகை சரண்யா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.;

Update:2025-09-18 06:19 IST

சென்னை,

கடும் சர்ச்சைகளுக்கு இடையே சமீபத்தில் திரைக்கு வந்து கவனம் ஈர்த்த ‘பேட் கேர்ள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், சரண்யா ரவிச்சந்திரன். ‘டீசல்', ‘லாயர்' என படங்கள் கைவசம் வைத்திருக்கும் அவர், சமூகத்தில் பெண்களுக்கு அநீதி நடந்து வருவதாக கூறியுள்ளார்.

‘பேட் கேர்ள்' படம் வெளியாவதற்கு முன்பாகவே, பெண்களை மோசமாக சித்தரித்து விட்டார்கள் என்று பேசினார்கள். படம் வெளியானதற்கு பிறகு, ‘இருந்தாலும் இப்படியா...' என்கிறார்கள். ஆண்கள் பேசினால் அடக்கி வாசிக்கும் சமூகம், பெண்கள் தவறு செய்துவிட்டால் உடனே எள்ளி நகையாடுகிறார்கள், கேவலப்படுத்துகிறார்கள்.

தெரிந்து செய்வது தான் தவறு. படத்தில் கூட, காதல் தோல்விகளைக் கண்ட அந்த ரம்யா கதாபாத்திரத்தைக் கேவலமாக பேசினார்களே தவிர, ஏமாற்றிய ஆண்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. கலாசாரத்தை மீறுவது சினிமாவின் நோக்கமல்ல. எதார்த்தத்தை சொல்வது தான்.

உலகில் காதல் தோல்விகளைச் சந்திக்காதவர்கள் யாருமே இல்லை. கடைசியில் நிலைக்கும் காதலே, இங்கு பலருக்கு வாழ்க்கைத்துணை. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் நிஜம். படத்தை படமாக பாருங்கள். பெண்களையும் சமமாக பாருங்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்