திரௌபதி 2 திரைப்படம்; குழந்தைகளுக்கு பாடமாக வைக்க வேண்டும் - எச்.ராஜா

திரௌபதி 2 படத்தில் இருப்பது அனைத்தும் சரித்திர உண்மை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-22 20:03 IST

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான 'பழைய வண்ணாரபேட்டை' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு 'திரௌபதி' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 15-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நட்டி, வேலராமமூர்த்தி. நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று திரௌபதி 2 படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிறகு, பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“திரௌபதி படத்தின் முதல் பாகத்தை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதன் 2-ம் பாகத்தை பார்த்தேன். தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகக்கும் பாடமாக வைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கதைக்கருவை எடுத்து அதை படமாக்கி இருக்கிறார்கள்.

ஆப்கானிய சுல்தான்கள் டெல்லியை ஆக்கிரமித்து, அதன் பிறகு அலாவுதீன் கில்ஜி காலகட்டத்தில் மாலிக் கபூர் தமிழகத்தின் மீது படையெடுத்த பின்னர், சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகம் மத ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1300-களின் துவக்கத்தில் தேவகிரி வீழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மதுரையில் சுல்தானியர்கள் ஆட்சி நடந்தபோது இந்துக்கள் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். இந்த படத்தில் இருப்பது அனைத்தும் சரித்திர உண்மை. இதையெல்லாம் நமது பள்ளி குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் பாடமாக வைக்க வேண்டும். நமது முன்னோர்கள் எவ்வாறெல்லாம் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அனைவரும் குடும்பத்துடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்