மோகன் ஜியின் “திரௌபதி 2” படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள ‘திரௌபதி 2’ படம் நாளை வெளியாகிறது.;
சென்னை,
2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23 ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘திரௌபதி 2’ படத்தின் படக்குழுவை அன்புமணி ராமதாஸ் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படம் திருவண்ணாமலையை ஆண்ட வீரவல்லாளர் மற்றும் காடவராயர்களின் வரலாற்றை பேசுகிறது என்று அறிந்தேன். நம் முன்னோர்களின் வீரத்தையும் மக்கள் நலன் காக்கும் ஆட்சி முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தை விரைவில் திரையரங்கில் காண உள்ளேன். நாளை வெளியாகும் ‘திரௌபதி 2’ திரைப்படம் வெற்றிபெற இயக்குநர் மோகன் ஜி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது.