திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: மு.வீரபாண்டியன் இரங்கல்

இயக்குநர் வி. சேகர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது;

Update:2025-11-15 10:17 IST

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குநர் என பெயரெடுத்தவர், வி.சேகர் (வயது 72). அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இயக்குநர் வி.சேகருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இயக்குநராக திகழ்ந்த வி.சேகர் (73) நேற்று (14.11.2025) மாலையில் போரூர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெய்வாநத்தம் என்ற கிராமத்தில் பிறந்த வி.சேகர், திருவண்ணாமலையில் தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

மலேரியா ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த வி.சேகர், புகழ் பெற்ற எடிட்டிங் கலைஞர் பி.லெனின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக வளர்ந்து வந்தார்.

இடதுசாரி இயக்கங்களின் மீது ஈர்ப்பு கொண்ட வி.சேகர், தமிழ் தேசியக் கொள்கையின் செயல்பாட்டாளராக திகழ்ந்தார். இவரது இயக்கத்தில் 1988 - 2013 கால கட்டத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சமூகத்தின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மகனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்