மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சம்மன்
தொழில் அதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.;
மும்பை,
‘கெயின் பிட்காயின்' என்ற பெயரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான அமித் பரத்வாஜிடம் இருந்து, உக்ரைனில் பிட்காயின் சுரங்கம் அமைப்பதற்காக தொழில் அதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அந்த ஒப்பந்தம் நிறைவேறாத நிலையிலும், சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள அந்த பிட்காயின்கள் இன்னும் ராஜ் குந்த்ரா வசமே இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தான் வெறும் இடைத்தரகராக செயல்பட்டதாக ராஜ் குந்த்ரா முன்வைத்த வாதத்தை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளதுடன், அவர் ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட மும்பை சிறப்பு கோர்ட்டு, தற்போது முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மற்றும் துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேஷ் சதிஜா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் வருகிற 19-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட்டின் சம்மன், பிட்காயின் மோசடி வழக்கில் ராஜ் குந்த்ராவிற்கு நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.