ரஜினி படத்தில் நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க - பா. ரஞ்சித்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.;
சென்னை,
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித், “'கபாலி' பட சமயத்தில் 'உனக்கு எல்லாம் ரஜினி வாய்ப்பு கொடுத்தார், ரஜினியை வைத்து நீ எப்படி இந்த டயலாக் பேசலாம்'னு எழுதினாங்க. அவ்வளவு மோசமாக விமர்சித்த பிறகு எனக்கு என்ன பண்றதுனு தெரியல. 'கபாலி' படத்தோட வெற்றி குறித்து தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரியும். 'கபாலி' ரிலீஸுக்கு முன்னாடியே 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய திரைப்படம். விமர்சன ரீதியாக மோசமாக இருந்த படங்களை வசூல் ரீதியாக வெற்றியாகக் கொண்டாடியிருக்காங்க. ஆனா, 'கபாலி' படத்தை மிக மோசமாக விமர்சித்தாங்க. 'ஒரு நடிகரை நீ எப்படி இப்படி பேச வைக்கலாம். ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்'னு எழுதினாங்க.அதை உண்மையாகவே எப்படி கையாளணும்னு எனக்குத் தெரியல. இத்தனை ஆண்டுகள் என்னை இழிவாக விமர்சித்த சினிமா குறித்து ஏன் அவர்கள் கேள்வி எழுப்பல.
நான் 'கபாலி' படத்தை நல்லா இயக்கினேன்னு ரஜினி நம்பினார். அது மிகப்பெரிய வெற்றிப் படம்னு நம்பி எனக்கு 'காலா' படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார். 'கபாலி' படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா, ரஜினியை வைத்து நிலமற்ற மக்களுக்கு நில உரிமை கோருதல் குறித்தான விஷயத்தைப் பேசினேன்” என்றார்.